சோதனைகளும் இன்னல்களும் (#11342)

எவரது சோதனைகள் உமது அருகிலுள்ளோர்   போன்றவர்களுக்குக் குணப்படுத்தும் மருந்தாகுமோ, எவரது வாள் உந்தன்பால் அன்பு கொண்டோர் அனைவரின் ஆர்வமிகு ஆவலாகுமோ, எவரது ஏவுகணை உம்மை நினைத்து வாடும் உள்ளங்களின் அதி விருப்பமாகுமோ, எவரது கட்டளை உம்மை அறிந்து அங்கீகரித்துள்ளோரின் ஒரே நம்பிக்கையாகுமோ, அவரே நீர்தான்! உமது தெய்வீக இனிமையின் சாட்சியாகவும், உமது வதனத்தின் மகிமையின் புகழொளியின் சாட்சியாகவும், உயர்விலுள்ள உமது இருப்பிடங்களிலிருந்து உமது அண்மையை  நெருங்கிட உதவிடக் கூடியவற்றை எங்கள் மீது அனுப்பியருளுமாறு உம்மை நான் வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, எங்களின் கால்களை உமதுசமயத்தில் உறுதிப்படுத்தவும், உமது அறிவின் ஒளிர்வினால் எங்களின் இதயங்களைத் தெளிவடையவும், உமது நாமங்களின் பொலிவினால் எங்களின் நெஞ்சங்களை ஒளி பெறவும் செய்வீராக.

-Bahá'u'lláh
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11343)

என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக! உமது பாதையில் கொடுந்துன்பங்கள் விளையா- விடில் உமது உண்மை அன்பர்கள் எவ்வாறு கண்டுகொள்ளப்படுவர்; மற்றும், உமதன்பின் பொருட்டுத் தாங்கிக் கொள்ளப்படும் சோதனைகளின்றி உமக்காக ஏங்குவோர் போன்றவர்களின் ஸ்தானம் எவ்வாறு வெளிப்படுத்தப்படும்? உமது வலிமையே எனக்குச் சான்று பகர்கின்றது! உம்மைப் போற்றுவோர் அனைவருக்கும் தோழர்களாய் இருப்பது அவர்கள் சிந்திய கண்ணீரேயாகும்; உம்மைத் தேடுபவருக்கு ஆறுதல் அளிப்பது அவர்கள் வெளிப்படுத்திடும் புலம்பலேயாகும்; மற்றும், உம்மைச் சந்திக்க விரைபவர்களின் உணவு அவர்களது உடைந்த உள்ளங்களின் துண்டுகளேயாகும். 

நான் உமது பாதையில் அனுபவிக்க நேர்ந்த மரணத்தின் கசப்பு, எனது சுவையுணர்வுக்கு எவ்வளவு இனிமையானது; எனது கணிப்பில், நான் உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்ததற்காக, எதிரிகளின் கணைகளை எதிர் கொண்டது எத்துணை மதிப்புடையதாகும்! என் இறைவா, உமது சமயத்தில் நீர் விரும்பியவற்றை எல்லாம் நான் ஒரே மடக்கில் உட்கொண்டிட அருள்வீராக; நீர், உமது அன்பில், கட்டளையிட்ட அனைத்தையும் என்பால் அனுப்பிடுவீராக. உமது ஒளியின் சாட்சியாக! நீர் விரும்பியதை மட்டுமே நான் விரும்புகின்றேன், நீர் எதனை நெஞ்சார நேசிக்கின்றீரோ அதனையே நானும் நெஞ்சார நேசிக்கின்றேன். உம்மிலேயே நான், எல்லா வேளைகளிலும் என் முழு நம்பியிருத்தலையும், நம்பிக்கையையும் வைத்துள்ளேன். 

என் இறைவா, இவ் வெளிப்பாட்டிற்கு உதவியாளராக, உமது நாமத்திற்கும் உமது இறைமைக்கும் தகுதி வாய்ந்தவராய்க் கருதப்படுவோரை எழுந்திடச் செய்யுமாறு நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்; அதனால் அவர்கள், உமது உயிரினங்களிடையே என்னை நினைவு கூர்ந்தும், உமது நிலவுலகில் உமது வெற்றிச் சின்னங்களை ஏற்றிடவும் கூடும். 

உமக்கு விருப்பமானதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11344)

பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப்படுவீராக! அக நோக்குடைய ஒவ்வொரு மனிதரும் உமது இறைமையையும், உமது மாட்சிமையையும் ஒப்புக் கொள்வார். உய்த்துணரக் கூடிய ஒவ்வொரு கண்ணும் உமது மாட்சிமையின் மகத்துவத்-தையும், உமது வலிமையின் வலிந்தீர்க்கவல்ல சக்தியினையும் கண்ணுறுகின்றது. சோதனைகள் என்னும் காற்று உமது விருப்பத்தின்பால் முழு விசுவாசம் கொண்டோர் போன்றவர்களை உமது அரசவையினை அணுகுவதிலிருந்து பின்னடையச் செய்வதிலும், தடுப்பதிலும் தோல்வி அடைந்தே ஆகவேண்டும். 

உமது அன்பெனும் தீபம் அவர்கள் இதயங்களில் எரிந்து கொண்டிருக்கின்றது என்றும், உமது மென்மையெனும் ஒளி அவர்கள் நெஞ்சங்களில் ஏற்றப்பட்டுள்ளது என்றும், நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டம் உமது சமயத்திலிருந்து அவர்களைத் திசை மாறச் செய்யும் திறமையற்றது; மேலும், மாறிடும் அதிர்ஷ்ட சூழல்கள் அவர்களை உமது நல்விருப்பத்திலிருந்து என்றுமே வழி தவறிப் போகச் செய்திடா. 

என் கடவுளே, அவர்கள் சாட்சியாகவும், உம்மிடமிருந்து பிரிவுற்றதால் அவர்களின் நெஞ்சங்கள் விடும் பெருமூச்சின் சாட்சியாகவும், ஆன்மாக்களை, நீர் விதித்து அருளியவற்றினால் பேணி வளர்க்குமாறும், உமது எதிரிகளின் பொல்லாங்கிலிருந்து அவர்களைப் பாது-காக்குமாறும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் ஏற்படாமலும், அவர்களுக்கு எவ்விதத் துன்பமும் நிகழாமலும் பார்த்துக் கொள்ளுமாறு உம்மை நான் வேண்டிக் கொள்கிறேன்.

-Bahá'u'lláh
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11345)

கடவுளே, என் கடவுளே,  உமது  வள்ளன்மை-யாலும் தாராள குணத்தாலும் எனது துக்கத்தைப் போக்கி, உமது இறைமையினாலும், வலிமையினாலும் எனது துயரத்தை அகற்றிடுவீராக. என் இறைவா, எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பங்கள் என்னைச் சூழ்ந்துள்ள இவ் வேளையில், உந்தன்பால் முகத்தினைத் திருப்பிய நிலையில், என்னைக் காண்கின்றீர். உயிரினங்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய பிரபுவே, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களுக்கும் நிழல் கொடுப்பவரே; மனிதர்களின் உள்ளங்களையும் ஆன்மாக்களையும் ஆட்கொண்டிட்ட உமது நாமத்தாலும், உமது கருணைக் கடலின் அலைகளினாலும், உமது வள்ளன்மை என்னும் விடிவெள்ளியின் சுடரொளியினாலும், தங்களின் முகங்களை உமது திசையில் திருப்புவதிலிருந்து எந்தச் சக்தியும் தடுத்திடாத அன்பர்கள் எண்ணிக்கையில் என்னையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளுமாறு நாமங்களுக் கெல்லாம் அதிபதியாகிய, விண்ணுலகையெல்லாம் ஆக்கியவருமாகிய, உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்! 

என் பிரபுவே, இந் நாளில் எனக்கு நேரிட்டுள்ளவற்றைப் பார்க்கின்றீர். என்னை உந்தன்பால் எழுந்து சேவை செய்யவும் உமது பண்புகளைப் பாராட்டவும் உதவக் கூடியவை எவையோ அவற்றை எனக்கு விதித்திடுமாறு உமது நாமங்களுக்குப் பகலூற்றானவரின் பெயரினாலும் உமது இயல்புகளுக்கு தோற்றிடமானவரின் பெயரினாலும் மன்றாடிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், அதி சக்தியுடையவர், மனிதர் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் பழக்கமுடையவர்! 

மேலும், இறுதியாக, என் காரியங்களை ஆசீர்வதித்து, என் கடன்களைத் தீர்த்து, எனது தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு உமது வதனத்தின் ஒளியின் பெயரால் உம்மிடம் யாசிக்கின்றேன். 

எவரது சக்திக்கும் எவரது ஆட்சிக்கும் ஒவ்வொரு நாவும் சாட்சியம் அளித்துள்ளதோ, எவரது மாட்சிமையையும் இறைமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்த ஒவ்வோர் உள்ளமும் ஒப்புக்கொண்டுள்ளதோ அவர்தான் நீர். செவிமடுத்து, பதிலளிக்கச் சித்தமாயுள்ள இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11346)

என் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக! உந்தன் நேசர்களின் பெருமூச்சினிலும், உம்மைக் கண்ணுற ஏங்குவோர் சிந்தியக் கண்ணீரின் பெயராலும், உமது நாளில் உந்தன்   மென்கருணையை எனக்குத் தரமறுத்திடாதீர் என்றும், அல்லது உந்தன் வதனத்திலிருந்து பிரகாசித்திடும் ஒளியின் முன் உமது  ஒருமைத்தன்மையைப் புகழ்ந்து பாடிடும் புறாவின் கீதங்களை நான் பெறாதிருக்கச் செய்திடாதீர் என்றும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.  என் கடவுளே! நான் ஆழ்ந்த துயரில் உள்ளேன்! சகலத்தையும் கொண்டுள்ளவர் எனும் உந்தன்   பெயரை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளதைப் பாருங்கள். நிச்சயமாக நான் அழியக் கூடியவனே. அழியவியலாதவர் எனும் உந்தன்  நாமத்தை நான் பற்றிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். ஆகையால், மென்மையானவரான, அதிவுயரியவரான நீர், என்னை, எனது தான் எனும் சுபாவத்திற்கும், தீய ஆசைகளின் ஈர்ப்புகளுக்கும் கைவிட்டு விடாதீர் என நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்.  உந்தன் சக்தி எனும் கரத்தால் என் கரத்தினைப் பிடித்துக்கொள்வீராக, மேலும் எனது பகட்டுகள், பயனற்ற கற்பனைகள் ஆகிய ஆழங்களிலிருந்து என்னை விடுவித்து, நீர்  வெறுக்கக்கூடிய அனைத்-திலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவீராக.

ஆதலால், என்னை, உம்மிடம் முழுமையாக திரும்பிடவும், உம்மிடமே  என் முழு நம்பிக்கையை வைத்திடவும், உம்மை என் புகலிடமாக நாடிடவும், உமது  வதனத்தின்பால் விரைந்திடவும் செய்வீராக. மெய்யாகவே, உந்தன் வல்லமையின் சக்தியின் வாயிலாக  நீர்  விரும்பியதைச் செய்யவல்லவரும், உந்தன் விருப்பம் எனும் ஆற்றலின் வழியாக  நீர்  தேர்வுச்செய்யும் எதனையும் ஆணையிடுபவரும், நீரே ஆவீர்.  உமது கட்டளையின் இயக்கத்தை எவரொருவராலும் எதிர்த்திடவியலாது; உந்தன்   நியமனத்தின் மார்க்கத்தைத் திசை திருப்பிட எவராலும் இயலாது. உண்மையாகவே, சர்வ வல்லவரும், சர்வ மகிமைமிக்கவரும், அதி வளமிக்கவரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11347)

இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்? சொல்: இறைவனே போற்றி! அவரே கடவுள்! யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற் பணிவர்! 

— பாப் பெருமானார் 

என் கடவுளே, எல்லாத் திசைகளிலிருந்தும் என் மீது துன்பங்கள் பொழிந்துள்ளதையும், அத்துடன், அவற்றை நீக்கவோ, மாற்றவோ உம்மைத் தவிர வேறு எவருக்கும் இயலாது என்பதையும் நீர் நன்கு அறிவீர். உமது மண்ணுலக வாழ்க்கையில் ஓர் ஆன்மாவின் ஸ்தானத்தை, வலிந்தீர்க்கவல்ல உமது சக்தியினைக் கொண்டு மேன்மைப் படுத்த வேண்டுமென்றும், இவ்வுலகின் வீண் பகட்டுகளின்பால் அவ்வான்மாவின் மனம் சென்றிடாதிருக்க வேண்டுமென்றும் நீர் விரும்பினாலன்றி, எந்த ஓர் ஆன்மாவுக்கும் நீர் கொடுந்துன்பங்கள் விளைவிக்க மாட்டீர் என்று, உம் மீதுள்ள எனதன்பின் காரணமாக, நிச்சயமாகத் எனக்குத் தெரியும். உண்மையாகவே, எல்லாச் சூழல்களிலும் விண்ணுலகங்களிலும் மண்ணு-லகிலுமுள்ள அனைத்தையும் நான் உடைமையாகக் கொள்வதை விட, உந்தன் நினைவையே மேலாக விரும்பிடுவேன் என்பதை, நீர், நன்கு அறிந்திருக்கின்றீர். 

என் கடவுளே, உமக்குக் கீழ்ப்படிதலிலும் உமதன்பிலும் என் இதயத்தைப் பலப்படுத்தி, உமது பகைவர்களின் கூட்டத்தினிடமிருந்து நான் முற்றாக விலகியிருக்கும் நிலையினை, எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, உமது ஒளியின் மீது ஆணை இடுகின்றேன்; உம்மைத் தவிர வேறெதனையும் நான் விரும்வில்லை; உமது கருணையைத் தவிர வேறெதனையும் நான் விழைவதில்லை; உமது நீதியைத் தவிர வேறெதன்பாலும் நான் அச்சம் கொள்வதில்லை; என்னையும் மற்றும் நீர் நேசிப்போரையும் உமது விருப்பத்திற்கேற்ப மன்னித்தருளுமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், வள்ளன்மை மிக்கவர். 

விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவற்றின் அதிபதியே, எல்லா மனிதர்களின் புகழ்ச்சிக்கும் மேலாக வரம்பின்றி உயர்த்தப்பட்டிருப்பவர் நீரே, உமது உண்மை ஊழியர்களின் மீது அமைதி நிலவுமாக; எல்லா உலகங்களின் பிரபுவாகிய இறைவனுக்கே ஒளி உரியதாகுக.

-The Báb
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11348)

என் இறைவா, உமது வலிமை சாட்சியாக உம்மை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கின்றேன்! சோதனைக் காலங்களில் என்னைத் தீங்கெதுவும் தாக்காதிருக்கச் செய்வீராக; கவனக் குறைவான வேளைகளில் உமது அருட்தூண்டுதலின் வாயிலாக, எனது காலடிகளை நேர்வழியில் நடத்திடுவீராக. நீரே கடவுள், நீர் விரும்பியதைச் செய்யும் ஆற்றல் படைத்தவர் நீரே. எவருமே உமது விருப்பத்தை எதிர்க்கவோ, உமது நோக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ இயலாது.

-The Báb
-----------------------

சோதனைகளும் இன்னல்களும் (#11349)

பிரபுவே! எல்லாத் துன்பங்களையும்  நீக்குபவரும், எல்லா வேதனைகளையும் களைபவரும் நீரே! ஒவ்வொரு துயரையும்  அகற்றுபவரும், ஒவ்வோர் அடிமையை விடுவிப்பவரும், ஒவ்வோர் ஆன்மாவை  மீட்பவரும் நீரே ஆவீர். பிரபுவே! உந்தன் கருணையின் வாயிலாக விடுதலை வழங்கி, இரட்சிப்பு பெற்ற  உந்தன்  ஊழியர்களுள் ஒருவனாக என்னைக் கருதிடுவீராக.

-The Báb
-----------------------

